மும்பை: “சினிமா தயாரிப்பில் இந்தியா உலகளாவிய மையமாக வளர்ந்து வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ‘வேவ்ஸ்’ (WAVES – World Audio Visual Entertainment Summit) உலக பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், இந்திய சினிமாவின் வளர்ச்சி குறித்து பல முக்கியக் கருத்துகளை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்ஷய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாரம்பரிய கலைக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் இந்தியா சிறந்த சங்கமமாக மாறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்திய சினிமா இந்தியாவின் கலாசாரத்தை உலகிற்கு எடுத்துச்செல்லும் பாலமாக இருந்ததையும், இந்திய இசை மற்றும் திரைப்படங்கள் உலக மக்களை இணைக்கும் பாலமாக மாறியுள்ளதையும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய நிலையில் இந்தியா, கேமிங், இசை, கிராபிக்ஸ் உள்ளிட்ட படைப்பாற்றல் துறைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

‘வேவ்ஸ்’ மாநாடு என்பது ஒவ்வொரு கலைஞருக்கும், படைப்பாளிக்கும் உலகளாவிய தரத்தை நோக்கி செல்லும் தளமாக அமைந்துள்ளதாக பிரதமர் கூறினார். உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்றதையும் அவர் எடுத்துக்காட்டினார்.
இந்தியாவின் உணவுப் பரம்பரையும், இசையும் உலகளவில் பெரிதும் பேசப்படுவதாக மோடி நினைவுபடுத்தினார். விரைவில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும், தற்போதைய நிலையில் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய சினிமாவின் ஐந்து பிரபலமான கலைஞர்களின் நினைவாக அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. குரு தத், பி. பானுமதி, ராஜ் கோஸ்லா, ரித்விக் கட்டக் மற்றும் சலீல் சவுத்ரி ஆகியோருக்கு அஞ்சலாக பிரதமர் இந்த அஞ்சல் தலைகளை வெளியிட்டார்.
இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கும் ஆதரவு, தொழில்நுட்ப மேம்பாடுகளோடு இணைந்து, உலகளவில் இந்தியாவை திரைப்படத் துறையில் முன்னணிக்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.