2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று, இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிதியமைச்சரை சந்தித்து, தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்தனர்.
குறிப்பாக, தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அப்போதுதான் நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் அதிக செலவழிப்பு வருமானம் கிடைக்கும். இது நிறுவனங்களின் விற்பனை மற்றும் வருவாயை அதிகரித்து வேகமான பொருளாதார சுழற்சிக்கு வழிவகுக்கும். எனவே இதனை உறுதி செய்ய நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறை பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், எரிபொருளின் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐஐ தலைவர் சஞ்சீவ் பூரி, “உலக அளவில் பல சவால்கள் உள்ளன. அதே நேரத்தில் இந்திய பொருளாதாரத்தின் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. சீனா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான பொருட்களை குவித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், உலக மதிப்புச் சங்கிலியில் இந்தியாவை ஒருங்கிணைப்பதைத் தவிர, ஆடைகள், காலணிகள், போன்ற அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகளுக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை எடுக்க சிஐஐ பரிந்துரைத்துள்ளது. அதேபோல, 20 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரியில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.