வாஷிங்டன்: ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்த இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர், ஜூலை 14ஆம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளனர் என நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் விண்வெளிக்குப்புறப்பட்டனர். ஜூன் 27ஆம் தேதி அவர்கள் அறிவியல் ஆய்வுகளை ஆரம்பித்தனர். திட்டத்தின்படி 14 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபடவேண்டும் என்பதற்கேற்ப, இன்றுடன் அந்த காலம் நிறைவடைந்துள்ளது.
இந்த பயணத்தின் போது, சுபன்ஷு சுக்லா ஒரு விவசாயியாக மாறியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெந்தயம், பச்சை பயிறு போன்ற நாற்றுகளை வளர்த்து, மைக்ரோகிராவிட்டி நிலையில் உள்நாட்டு பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைக் குறித்து புதிய தகவல்களை சேகரித்துள்ளார்.
இந்திய விண்வெளி வீரர் இவ்வாறு விவசாய ஆய்வுகளை மேற்கொண்டிருப்பது, இந்திய அறிவியல் வளர்ச்சிக்கும், பூமிக்குப் பின்னாலான மனித வாழ்வுக்கான வாய்ப்புகளுக்குமான ஆராய்ச்சிக்கும் பெரும் பங்களிப்பாக பார்க்கப்படுகிறது.
விண்வெளி நிலையத்தில் நடைபெற்ற இந்த மிஷன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒரு புதிய திருப்புமுனையாக மாறியுள்ளது. தற்போது, சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர், திட்டமிட்டபடி ஜூலை 14ஆம் தேதி பூமிக்கு பாதுகாப்பாக திரும்ப இருக்கின்றனர்.
அவர்கள் வரும் நாள் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி சமூகத்தினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞானிகள், அவர்கள் திரும்பிய பிறகு பெறும் தரவுகள் மற்றும் அனுபவங்கள் மூலம் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான புதிய பாதையை உருவாக்கலாம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.