ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் போன்ற பகுதிகளை தாக்கியது.இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஏவுகணை தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. 9 இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.இந்திய பாதுகாப்பு படைகள், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், தீவிரவாதிகளின் உட்கட்டமைப்பை ஒழிக்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் கூறினர். வெளியுறவுத்துறை செயலாளர், பதிலடி நடவடிக்கைக்கு இந்தியா தயாராகவே உள்ளதாகவும் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய பெண் அதிகாரிகள் இந்த தாக்குதலின் விபரங்களை பகிர்ந்தனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த தாக்குதல் திட்டமிட்ட வகையில் நடைபெற்றதாகவும், நாட்டின் பாதுகாப்பு பெருமை அடைந்ததாகவும் தெரிவித்தார்.
இந்திய படைகள் சீராக செயல்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுத்துள்ளன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இது போர் நடவடிக்கையாகும் என்றும் பதிலடி வழங்குவோம் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்தியா தாக்கிய இடங்களில் தீவிரவாத முகாம்கள் இல்லை என்றும், அது கற்பனையே என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரல் அஹமது ஷெரிப், “இந்தியாவுக்கு எதிராக பேரழிவு தரும் பதிலடி நடத்துவோம்” என்று அதிர்ச்சி தெரிவிக்கிறார். இந்த பதிலடி எப்போது, எப்படி இருக்கும் என்பது குறித்து பாகிஸ்தான் அரசு திட்டமிடுகிறது.இது இருநாட்டு உறவுகளை மேலும் பதற்றமாக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.