இந்தியா உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய ரயில்வே தினமும் சுமார் 13,000 ரயில்களை இயக்குகிறது, லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவின் மிக நீளமான ரயிலான “சூப்பர் வாசுகி” பற்றி பலருக்கு தெரியாது. இதற்கான முக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

சூப்பர் வாசுகி எனப்படும் இந்த ரயில் சுமார் 3.5 கிலோமீட்டர் நீளமுடையது. இதில் மொத்தம் 295 பெட்டிகள் உள்ளன. இத்தகைய நீளமான ரயில்களை ஒரே பார்வையில் முழுவதும் காண இயலாது. இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் மிக நீளமான சரக்கு ரயில் இதுதான் என்ற பெருமை சூப்பர் வாசுகிக்குக் கிடைத்துள்ளது.
இந்த ரயிலை இயக்க 6 சக்திவாய்ந்த என்ஜின்கள் இணைந்து செயல்படுகின்றன. ரயிலின் அளவு மற்றும் நீளம் காரணமாக, இது ஒரு ரயில்வே கிராசிங்கைக் கடக்க கூட சில நிமிடங்கள் ஆகும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு இது நேர தாமதத்தைக் ஏற்படுத்தும் அளவிற்கு இது மிகப்பெரியது.
சூப்பர் வாசுகி ரயில் சத்தீஸ்கரில் உள்ள கோர்பாவிலிருந்து நாக்பூருக்கு அருகிலுள்ள ராஜ்நந்த்கான் வரை பயணிக்கிறது. இந்த பயணத்தில் சுமார் 27,000 டன் நிலக்கரியை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. சுமார் 11.20 மணிநேர பயண நேரத்தில் இந்த ரயில், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை சுரங்கங்களில் இருந்து உற்பத்தி மையங்களுக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.