புது டெல்லி: இந்தியாவின் இராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்கு அதிகரிக்கக்கூடும். அப்போது, இராணுவ செலவினங்களில் இந்தியா 3-வது பெரிய நாடாக மாறும் என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனம் (KPMG) ஆகியவற்றின் கூட்டு அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-
* இந்தியாவின் இராணுவ உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் ரூ.1.6 லட்சம் கோடி. இது 20147-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
* இந்தியாவின் இராணுவ ஏற்றுமதி ரூ.30,000 கோடி. இது ரூ.2.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும். அப்போது, இந்தியா இராணுவ உபகரணத் துறையில் உலகளாவிய விநியோகஸ்தராக இருக்கும்.
* இந்தியாவின் இராணுவ பட்ஜெட் தற்போது ரூ.6.8 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047-ம் ஆண்டுக்குள் ரூ.31.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும். தற்போது இராணுவச் செலவினங்களில் 4-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, 3-வது பெரிய நாடாக மாறும்.

* உள்கட்டமைப்பு மற்றும் நவீன உபகரணங்களுக்கான இந்தியாவின் செலவு 27 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கும்.
* பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவு 4 சதவீதத்திலிருந்து 8 முதல் 10 சதவீதமாக அதிகரிக்கும்.
* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இராணுவத் துறையின் பங்கு 2 சதவீதத்திலிருந்து 4 முதல் 5 சதவீதமாக அதிகரிக்கும்.
* முக்கிய இராணுவ தொழில்நுட்பங்களுக்கு இந்தியா தொடர்ந்து இறக்குமதியைச் சார்ந்திருக்கும். சிக்கலான இராணுவ உபகரணங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.
* எல்லைப் பிரச்சினைகள், பிராந்திய பதட்டங்கள் மற்றும் உலகளாவிய போட்டியாளர்கள் அரசாங்கத்தின் கவனத்தை நீண்ட கால முதலீடுகளிலிருந்து குறுகிய கால பதில்களுக்கு மாற்றக்கூடும்.
* பொதுத்துறை மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுவது முக்கியம். தனியார் நிறுவனங்களை பாதுகாப்புத் துறைக்கு ஈர்ப்பதற்கான ஊக்கத்தொகைகள் மற்றும் கொள்கை ஆதரவு முக்கியம்.
* வெளிநாடுகளுடனான தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் உணர்திறன் வாய்ந்த மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகவே உள்ளன என்று அறிக்கை தெரிவித்துள்ளது.