அமெரிக்கா தனது சமீபத்திய நடவடிக்கைகளில் பாகிஸ்தானை முக்கியமான கூட்டாளியாக முன்னிறுத்த முயற்சிக்கிறது. இந்தியா மீது வரி விதித்ததோடு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என இந்தியாவுக்கு அழுத்தம் தரும் நிலையில், தற்போது பாதுகாப்பு துறையில் முக்கிய மாற்றங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் ₹67,000 கோடி மதிப்பிலான புதிய ஆயுதங்களை வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இது, டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் நிலைப்பாடுகளுக்கு நேரடி பதிலாக கருதப்படுகிறது.

இந்த ஒப்புதலின் கீழ், ராணுவ BMP வாகனங்களுக்கு இரவு பார்வை திறன் கொண்ட தெர்மல் இமேஜிங் சாதனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது, எல்லை பிரதேசங்களில் ராணுவத்தின் செயல்திறனை அதிகரிக்கும். அதே நேரத்தில், கடற்படைக்கு சிறிய தானியங்கி மேற்பரப்பு கப்பல்கள், பிரம்மோஸ் ஃபயர் கண்ட்ரோல் அமைப்புகள் மற்றும் BARAK-1 ஏவுகணை அமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் பாதுகாப்பு மற்றும் தாக்குதலை எதிர்கொள்வதற்கான திறன் இந்தப் புதுப்பிப்புகளால் அதிகரிக்கப்படும்.
விமானப்படையை நோக்கி மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை. மலைப்பகுதி ராடர்கள் மற்றும் சக்ஷம், ஸ்பைடர் போன்ற அமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்புகள் எல்லைநிலை வான் கண்காணிப்பை மேம்படுத்துவதோடு, எதிரியின் விமானங்களை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் திறனை மேம்படுத்துகின்றன. மேலும், மூன்று படைகளுக்காக நீண்ட தூர ரிமோட் விமானங்களை வாங்கும் திட்டமும் நடைபெறுகிறது. இது 24 மணி நேரமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை எளிதாக்கும்.
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும் முன், இந்தியா தனது மூன்று படைகளையும் புதுப்பித்து பாதுகாப்பு வலுவை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பராமரிப்பு ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள், டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் எதிர்மறை அணுகுமுறைக்கு இந்தியா காட்டும் ஆக்கப்பூர்வமான பதிலாகவே பார்க்கப்படுகிறது.