பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு பதிலடி நடவடிக்கைகளை பலப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த முடிவை வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். “எந்த நிலையிலும் சிந்துநதி நீர் பாகிஸ்தானுக்கு பாயாது” என்று அவர் உரைத்தது, இந்தியாவின் கடுமையான அணுகுமுறையை வெளிக்காட்டியது.

1960ஆம் ஆண்டு உலக வங்கியின் நடுவழியில் உருவான ஒப்பந்தத்தின் கீழ், பியாஸ், சட்லெஜ், ரவி நதிகளின் நீர் இந்தியாவுக்காகவும், சிந்து, ஜீலம், செனாப் நதிகள் பாகிஸ்தானுக்காகவும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா செனாப் நதியில் 1,856 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான “சாவல்கோட் நீர்மின் திட்டம்” என்ற மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது இரு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக மொத்தமாக ₹22,704 கோடி செலவாகும் என அரசு மதிப்பீடு செய்துள்ளது.
இந்த திட்டம் கடந்த 40 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தாலும், தற்போது பாகிஸ்தானுடனான மோதல் சூழ்நிலையை அரசாங்கம் சந்தர்ப்பமாக பயன்படுத்தி, திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது. தேசிய நீர்மின் கழகம் இதற்கான ஒப்பந்தங்களை விரைவாக முடிக்க முயலுகிறது. இதற்காக ஜம்மு-காஷ்மீர் மின் மேம்பாட்டு கழகம் இணைந்து செயல்பட உள்ளது. மேலும், 3,000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனைக் குழு அனுமதி அளித்துள்ளது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் செனாப் நதியில் இந்தியா செயல்படுத்த உள்ள இந்த மின்திட்டம், இருநாட்டு உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தற்போது நிலவும் மோதல் சூழலில் பாகிஸ்தானின் அனுமதி தேவையில்லை என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது இரு நாடுகளுக்கிடையிலான நீர் விவகாரங்களில் புதிய கட்டத்தை உருவாக்கும்.