புதுடெல்லி: இந்தியாவின் UPI சேவை இப்போது மாலத்தீவில் தொடங்க உள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவுக்கு மூன்று நாள் பயணமாக இருந்த நிலையில், இந்தியாவில் UPI சேவையை அறிமுகப்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜெய்சங்கர், “டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று உலகில் நடக்கும் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கிறது. மாலத்தீவில் அத்தகைய கட்டமைப்பை அறிமுகப்படுத்த இப்போது நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். விரைவில் நீங்கள் மாலத்தீவில் UPI மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும்.
இது மாலத்தீவின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளிக்கும்,” என்றார். 2016 இல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த UPI, நாட்டின் பணப் பரிமாற்ற நடைமுறைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. பெரிய மால்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை UPI மூலம் பணம் செலுத்தப்படுகிறது.
வெளிநாடுகளிலும் UPI மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுவரை ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் UPI மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.