சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளில் தண்ணீரை நிறுத்த இந்தியா எடுத்துள்ள முடிவு, பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் முக்கியமான நதிநீர் ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தது. தீராத பகை கொண்ட இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக அமைதியை நிலைநாட்டிய இந்த ஒப்பந்தம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா தரப்பில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த முடிவின் மூலம், பாகிஸ்தானுக்காக ஒதுக்கப்பட்ட மூன்று முக்கிய நதிகளில் இருந்து இந்தியா தண்ணீரை பயன்படுத்தும் உரிமை பெறுகிறது.
எனினும், ஒரே நாளில் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை முழுமையாக நிறுத்துவது சாத்தியமில்லை. அதற்காக கால அவகாசம் தேவைப்படும் என்றும், அதன் அடிப்படையில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதுள்ள வசதிகளின் அடிப்படையில், மேற்கு நோக்கி செல்லும் நதிகளில் 5 முதல் 10 சதவீத தண்ணீரை மட்டுமே தற்போது நிறுத்த இயலும். நீரின் ஓட்டத்தை திருப்ப, புதிய அணைகள் மற்றும் கால்வாய்கள் அமைக்க வேண்டியிருப்பதாலும், இதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கை மூலம், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை அழுத்தம் கொடுத்து வழியமைக்க முடியும் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.