புதுடில்லி: ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது… ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் நாட்டின் GDP வளர்ச்சி விகிதம் 5.4% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் பதிவான 6.7% வளர்ச்சியிலிருந்தும், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான 8.1% வளர்ச்சியிலிருந்தும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.
இந்த நிதியாண்டில் நிதி வளர்ச்சி 6.2 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்த நிலையில், அது 5.4 சதவீதமாகக் குறைந்தது.
இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் GDP வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக குறைந்து இருப்பது பொருளாதார மந்தநிலையாக கருதக்கூடாது. 3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 நிதியாண்டில் ஜூலை-செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 7 காலாண்டுகளில் குறைந்த GDP வளர்ச்சியை 5.4 சதவீதமாக பதிவு செய்தது. முதல் காலாண்டில் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது.
இது ஒரு மந்தநிலை அல்ல. இது பொதுச் செலவுகள், மூலதனச் செலவுகள் மற்றும் பலவற்றின் செயல்பாடு இல்லாதது. 3-வது காலாண்டு இவை அனைத்தையும் ஈடுசெய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பொதுத் தேர்தல் மற்றும் மூலதனச் செலவுக் குறைப்பு காரணமாக முதல் காலாண்டில் வளர்ச்சி வேகம் குறைவாக இருந்தது. இது இரண்டாவது காலாண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டும் அதன்பிறகும் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாகத் தொடரும் என்றார்.