உத்தராகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 4 அன்று கங்கோத்ரி தாம் பாதையில் தராலி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டது.
இந்த பேரழிவில் 68 பேர் காணாமல் போனதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் 24 பேர் நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

இதுவரை இரண்டு உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,278 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பெரிய ஹோட்டல்கள், விடுதிகள், வீடுகள் இடிபாடுகளில் புதைந்துள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவக் குழுக்கள் இணைந்து பணியாற்றுகின்றன.
முதலில் தரை ஊடுருவும் ரேடார் பயன்படுத்தி தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் 50 மீட்டர் ஆழம் வரை கண்டுபிடிக்க கூடிய மீட்பு ரேடார் பயன்படுத்தப்பட்டது.
2.5 முதல் 3 மீட்டர் ஆழத்தில் 20 இடங்களில் கட்டிடங்கள் புதைந்துள்ளன என கண்டறியப்பட்டது.
மீட்பு ரேடார் 500 MHz அலைவரிசையில் இயங்கி, 10 மீட்டர் ஆழம் வரை மனித இருப்பைக் கண்டறிய முடியும்.
யாராவது உயிருடன் இருந்தால் உடனடியாக சிக்னல் அனுப்பும் வசதி உள்ளது.
குப்பைகளுக்குள் எந்த அசைவையும் கண்டறியும் திறனும் கொண்டது.
பல இடங்களில் ரேடார் பயன்படுத்தப்பட்டும் இதுவரை உயிருடன் உள்ள சிக்னல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இடிபாடுகளுக்குள் தேடுதல் பணிகள் சிக்கலான சூழ்நிலையில் நடைபெறுகின்றன.
நவீன கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் வரை மீட்பு பணி நிறுத்தப்படாது.
ரேடாருடன் கையடக்க கருவிகள் மற்றும் பிற நவீன உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தராலி பேரழிவு மாநிலத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் இடைவிடாமல் உழைத்து வருகின்றனர்.