மும்பை நகரில் இன்று அதிகாலை முதலே ஆப்பிள் ரசிகர்கள் ஆவலுடன் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். காரணம், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 17 சீரிஸ் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருப்பதுதான். இந்த அறிமுகம் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி கலிபோர்னியாவில் நடைபெற்றிருந்தாலும், இந்திய சந்தைக்கு இன்று தான் அதிகாரப்பூர்வ வெளியீடு நடைபெறுகிறது.

இந்த புதிய சீரிஸில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்தும் iOS 26 இயங்குதளத்தில் இயங்குகின்றன. வடிவமைப்பு, கேமரா தரம், பேட்டரி திறன் ஆகியவற்றில் சிறப்பான முன்னேற்றங்கள் உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் இந்த முறை விலை உயர்ந்ததாக இருக்கும் என்றாலும், ஆர்வலர்களின் உற்சாகம் குறையவில்லை.
மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரின் முன்பு நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும் முதல் நாள் முதலே புதிய ஐபோனை கையில் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு முழுவதும் அங்கு தங்கியுள்ளனர். இந்திய ரூபாயில் இந்த மாடல்கள் ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் புதிய ஐபோன் அறிமுகம் ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு பண்டிகை போலவே இருக்கும். இந்த முறை கூட அதே உணர்வு நிலவுகிறது. விலை உயர்ந்திருந்தாலும், அதற்கான பிரியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகளவில் ஆப்பிளின் விற்பனையை உயர்த்தும் வகையில் இந்திய சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.