டப்ளின்: அயர்லாந்தில் இந்திய சமூகத்தினர் மீது சமீபத்தில் நடந்த இனவெறி தாக்குதல்களை அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கடுமையாக கண்டித்துள்ளார். கடந்த சில வாரங்களில் இந்தியர்களுக்கு எதிராக பல கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஜூலை 19ஆம் தேதி 40 வயதான அமேசான் ஊழியர் ஒருவர் டல்லாஹ்ட் பகுதியில் டீனேஜ் கும்பலால் தாக்கப்பட்டார். தொடர்ந்து 32 வயதான சந்தோஷ் யாதவ் மீது ஆறு இளைஞர்கள் தாக்குதல் நடத்தி, கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மேலும் ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூலை மாதத்தில் மட்டும் மூன்று இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களைப் பற்றி அதிபர் ஹிக்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்திய சமூகம் மருத்துவம், செவிலியர், பராமரிப்பு, கலாச்சாரம், வணிகம் மற்றும் தொழில்முனைவு போன்ற துறைகளில் விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளதாகவும், இத்தகைய தாக்குதல்கள் அயர்லாந்தின் மதிப்புகளுக்கு முரணானவை என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும், இத்தகைய வன்முறைச் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என்று கூறினார். இவை சமூக ஒற்றுமையை பாதிக்கும் அபாயம் உள்ளன என்றும் எச்சரித்தார். அனைத்து சமூகங்களும் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழ வேண்டும் என்பது அயர்லாந்தின் நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தினார். இது, அந்நாட்டில் குடியிருக்கும் இந்தியர்களுக்கு நிம்மதியளிக்கும் ஒரு உறுதியான செய்தியாக அமைந்துள்ளது.
அயர்லாந்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் குடிமக்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கியுள்ளது. அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பவங்களுக்கு எதிராக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இனவெறி தாக்குதல்கள் உலகளவில் கவலைக்குரியதாக இருக்கும் நிலையில், அயர்லாந்து அதிபரின் கண்டனம் முக்கியத்துவம் பெறுகிறது.