புதுடெல்லி: அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார். இதே போன்று அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களும் கடந்த சில நாட்களாக நாடு கடத்தப்பட்டனர். ஏற்கனவே நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானத்தில் கைவிலங்கு மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 299 பேர் நேற்றுமுன்தினம் நாடு கடத்தப்பட்டு பனாமாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இந்தியர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை நாடு கடத்தும் விவகாரம் வெட்கக்கேடான செயல் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது X பதிவில், “பிரதமர் மோடி டிரம்புடன் பேசிய ஒரு வாரத்தில், இந்தியாவுக்கு மரியாதையுடன் திருப்பி அனுப்பப்படுவதற்கு பதிலாக, எங்கள் குடிமக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தியர்கள் ஏன் பனாமாவுக்கு அனுப்பப்பட்டனர்? இந்தியர்களை மனிதாபிமானமற்ற முறையில் நாடு கடத்த பிரதமர் மோடி அனுமதித்தது எப்படி? இந்தியர்களை நாடு கடத்துவது பற்றி பிரதமர் மோடி என்ன பேசினார்? அவர் என்ன ஒப்பந்தம் செய்தார்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.