பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி இரவு, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மசூதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியதாகவும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கங்களை எழுப்பியதாகவும், அவர்களை மிரட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, காவல்துறை அளித்த புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
அதன்படி, அவர்கள் இருவர் மீதும் அத்துமீறல் [பிரிவு 447], பொது அமைதிக்கு குந்தகம் [பிரிவு 505], மத நம்பிக்கையை புண்படுத்துதல் [பிரிவு 295A] மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மசூதியில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுவது எந்த சமூகத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் என்று தெரியவில்லை என்று கூறினார்.
குறித்த பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாக முறைப்பாட்டாளர் கூறியதாக நிதிபதி சுட்டிக்காட்டினார். அந்த வழக்கில், இதுபோன்ற செயல்கள் அனைத்தும் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் பிரிவு 295A-ன் கீழ் வராது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.