லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா வரும் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. விழா ஏற்பாடுகளில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா சஹபுதீன் ரஸ்வி பரேல்வி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
பரேல்வி நேற்று அளித்த பேட்டியில், “மகா கும்பமேளாவில் இஸ்லாமியர்கள் பெரிய அளவில் மதமாற்றம் செய்யப்படுவார்கள் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. சம்பந்தப்பட்ட குடிமகன் என்ற முறையில் எனது அச்சம் குறித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடந்த ஆண்டு நவம்பரில், அகாரா பரிஷத் மற்றும் நாகா துறவிகளின் கூட்டம், கும்பமேளாவில் முஸ்லீம்கள் கடைகளை அமைப்பதைத் தடை செய்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும்.
எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க கும்பமேளாவுக்கு செல்ல வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்துகிறேன்,” என்றார். இதற்கு மற்ற முஸ்லிம் மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உ.பி.யில் உள்ள ஜமியத் உலமா-இ-ஹிந்தின் சட்ட ஆலோசகர் மௌலானா காப் ரஷிதி கூறுகையில், “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக உலகம் முழுவதும் அறியப்படும் போது, இதுபோன்ற கோரிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாகும்.
மகா கும்பமேளாவில் முஸ்லிம்களை தடை செய்வது பற்றி பேசுவது அரசியலமைப்பின் ஆன்மாவை நசுக்குவது போன்றது. உ.பி., ஹஜ் கமிட்டியின் தலைவரும், சிறுபான்மை விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சருமான மொஹ்சின் ராசா, “முதலமைச்சருக்கு கடிதம் எழுதியவர்கள், சட்டவிரோதமாக மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, கும்பமேளாவில் மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதத்துக்கு மாறிவிடுவார்களோ என அஞ்சுகின்றனர். இது தனிநபர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளச் செய்யும் சூழ்ச்சியாகும்.