ஸ்ரீநகர்: தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, உத்தம்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14.2% வாக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து சம்பா மாவட்டத்தில் 13.3% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 24 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18-ம் தேதியும், 26 தொகுதிகளுக்கு 25-ம் தேதியும் தேர்தல் நடைபெற்ற நிலையில், 40 தொகுதிகளுக்கான 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று (அக்.1) காலை 7 மணிக்கு தொடங்கியது.
காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, 11.6% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தேர்தல் களத்தில் 415 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 17 பேர் முன்னாள் அமைச்சர்கள், 8 பேர் முன்னாள் எம்எல்ஏக்கள், 4 பேர் விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள். 3-ம் கட்ட தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.