பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 27 கிலோ நகை மற்றும் 1,562 ஏக்கருக்கான சொத்து ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது 1991-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தி தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், சேலைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த பொருட்களும் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன. இந்த வழக்கில் 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை அரசு ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடகாவுக்கு உரிய தொகையை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். வழக்கு முடிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், கர்நாடக அரசு வழக்கு நடத்திய தொகையை வழங்கவில்லை. எனவே, ஜெயலலிதாவின் நகைகளை 2023-ம் ஆண்டு ஏலம் விட வேண்டும் என்று பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி எச்.ஏ. மோகன் வழக்கை விசாரித்த “கர்நாடக மாநில கருவூலத்தில் உள்ள நகைகள், சேலைகள், சொத்துகள் குறித்த ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழக அரசு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தையின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஜனவரி 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீபா செய்த மேல்முறையீட்டு மனுவையும் நீதிமன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நேற்று தொடங்கியது.
கர்நாடக கருவூலத்தில் இருந்து தங்கம், வெள்ளி, வைரம், சொத்து ஆவணங்கள் அடங்கிய 6 பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. தமிழக அரசின் உள்துறை இணைச் செயலர் ஹனிமேரி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி எஸ்.பி.விமலா தலைமையிலான மதிப்பீட்டுக் குழுவினர், ஆவணங்களைச் சரிபார்த்து மதிப்பிட்டனர். பின்னர், அனைத்து நகைகளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன. முதலில் 1,562 ஏக்கர் நிலத்தின் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், 11,344 சேலைகள், 750 காலணிகள், 91 கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, சொத்து பட்டியலில் உள்ள 468 தங்கம், வைர நகைகள், ரத்தினக் கற்கள் சரிபார்க்கப்பட்டன.
வரிசை எண் 155 வரையிலான நகைகள் சரிபார்த்து, மதிப்பீடு செய்யப்பட்டு, நேற்று ஒப்படைக்கப்பட்டன. மொத்தம் 27 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீதமுள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சால்வைகள், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றை தமிழக அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்வார்கள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.