புதுடெல்லி: கடந்த செப்டம்பர் மாதம் வங்கதேச ஊடுருவல் தொடர்பான பணமோசடி வழக்கு பதிவு செய்து அமலாக்க இயக்குனரகம் விசாரணையை தொடங்கியது. வேலை தேடி இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தியாவில் தன்னைப் போன்ற பல பெண்கள் இருப்பதாக அவர் கூறியதை அடுத்து பல பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், ஒரு பெண்ணிடம் “போலி” ஆதார் அட்டை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 17 இடங்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜார்க்கண்டிற்குள் வங்கதேச மக்கள் பெருமளவில் ஊடுருவி இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது, ஆனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு அதை ஏற்க மறுக்கிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெற உள்ளது. ஜார்க்கண்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வங்கதேச ஊடுருவல் விவகாரத்தை எழுப்பினர்.
இதன் காரணமாக, ஜார்க்கண்டில் பழங்குடியின மக்கள் தொகை விகிதம் குறையும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் ஜார்கண்ட் பெண்களை திருமணம் செய்து நிலத்தை அபகரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், வங்கதேச ஊடுருவல் குறித்து விசாரிக்க பாரபட்சமற்ற குழு அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
மேலும், ஜார்கண்ட் பழங்குடியின பெண்களை திருமணம் செய்து வங்கதேசத்தினர் பெற்ற சொத்துக்களை செல்லாததாக்கும் சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.