புதுடில்லி: ரஷ்யாவின் நிஸ்னி நகரில் உள்ள முலினோ பயிற்சி மைதானத்தில் செப்டம்பர் 10 முதல் 16 வரை நடைபெறும் பலதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்கிறது. இந்தப் பயிற்சி “சபாட்” என அழைக்கப்படுகிறது.
இந்த முயற்சி, போர்தந்திரங்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. உலகின் பல நாடுகள் பங்கேற்கும் இந்தப் பயிற்சியில், இந்திய ஆயுதப் படைகள் 65 வீரர்களைக் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது.

இந்தக் குழுவில் 57 ராணுவ வீரர்கள், இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர். இவர்கள் அனைவரும் நேற்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பல்வேறு சவாலான சூழ்நிலைகளில் இணைந்து செயல்படுவதற்கான திறனை வளர்ப்பதே இப்பயிற்சியின் முக்கிய இலக்கு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்துறையில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்தவும் இத்தகைய கூட்டு ராணுவப் பயிற்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவின் பங்கேற்பு, அதன் உலகளாவிய பாதுகாப்பு உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகும்.