முந்தைய இங்கிலாந்து நிறுவனமான எம்ஜி மோட்டார் தற்போது சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தனது கார் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க, ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து “ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார்” எனும் பெயரில் தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம், ஜப்பானின் சுஸுகி மற்றும் இந்தியாவின் மாருதி நிறுவனம் இந்திய வாகன சந்தையில் காண்பிக்கும் ஆதிக்கத்தை போல், தங்களும் சந்தையில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான்.
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கி இருப்பதை தற்போது கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள “விண்ட்ஸர் இவி” என்ற மின்சார எஸ்யூவி காருக்கு இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக, இந்திய சந்தையில் இது நம்பர் ஒன் விற்பனையாகும் மின்சார காராகும். இதற்கு முன்னர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் இவி இந்த இடத்தைப் பிடித்திருந்தது.
இந்த வெற்றியைக் கருத்தில் கொண்டு, எம்ஜி மோட்டார் தனது விண்ட்ஸர் இவி காரின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன் உற்பத்தி ஆலை குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு விரைவில் சில மாற்றங்களை செய்து, அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி விரிவாக்கம் விண்ட்ஸர் இவி காருக்காக மட்டும் செய்யப்படுவது இல்லை, விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள எம்ஜி எம்9 மற்றும் எம்ஜி சைபர்ஸ்டர் ஆகிய மின்சார கார்களையும் கருத்தில் கொண்டு செய்யப்படுகின்றது.
மேலும், இந்த உயர்தர மின்சார கார்களை விற்பனை செய்வதற்காக, நிறுவனம் “எம்ஜி செலக்ட்” எனும் பிரத்யேக ஷோரூம்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இங்கு மட்டும் பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்களை கொண்ட வாகனங்கள் விற்பனை செய்யப்படும். எம்ஜி மோட்டார் இந்தியாவில் எம்9 மற்றும் சைபர்ஸ்டர் ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்திய பின்னர், இன்னும் பல பிரீமியம் கார்கள் வரவிருப்பதற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்திய வாகன சந்தையில் எம்ஜி மோட்டார் தனது நிலையை பரபரப்பாக வளர்த்துக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. விண்ட்ஸர் இவி காரின் அமோக வரவேற்புக்கான முக்கிய காரணமாக அதன் பிரீமியம் அம்சங்களே குறிப்பிடப்படுகின்றன. இதன் பரந்த உட்புற இட வசதி, பயணிகளுக்கு வழங்கும் வசதிகள், அதிகளவிலான லக்கேஜ் கொள்ளளவு ஆகிய அம்சங்கள், இந்திய வாகனக்காதலர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வரவேற்பை தொடர்ந்து, எம்ஜி மோட்டார் இந்திய சந்தையில் மேலும் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக வாகனத் துறையில் பரவலாக பேசப்படுகிறது.