டெல்லி: பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் அவரது உருவப்படத்துக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் டெல்லியில் உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி தலைமையில், ராஜ்யசபா திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா உள்ளிட்ட எம்பிக்கள் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, மீனவர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தியா-இலங்கை குழு பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கனிமொழி வெளியிட்ட பதிவில், “தமிழ் தேசம் காக்க தென்னாட்டில் இருந்து எழுந்த மாபெரும் அறிஞர் அண்ணா. மாநில அந்தஸ்தை சுவாசித்து, கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சிக்காக குரல் எழுப்பிய சுயமரியாதையாளர்.
திராவிட இன உரிமைப் போராட்டத்தின் வழிகாட்டியாக விளங்கி இன்றும் ஆதிக்க சக்திகளின் கனவாக இருக்கும் நிகரற்ற தலைவரின் கொள்கைகளைப் பின்பற்றி, அதிகாரக் குவிப்புக்கு எதிராக குரல் எழுப்பி, மாநில அந்தஸ்தை வெல்வோம்.”