பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி கொண்டாட்டம் பெரும் சோகமாக முடிந்தது. ஐ.பி.எல். தொடரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றியதைக் கொண்டாட ஜூன் 4ஆம் தேதி வெற்றி பேரணி நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் சுமார் 3 லட்சம் பேர் திரண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் மகிழ்ச்சியின் இடையே துயரமும் கலந்தது.

சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் வெளியே ஏற்படுத்தியிருந்த ஏற்பாடுகள் போதியவையாக இல்லை. கூட்டம் கட்டுப்பாட்டை மீறியது. திடீரென ஏற்பட்ட நெரிசலில் பலர் தவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடுகளை அறிவித்தது. இந்தப் பின்னணியில் விசாரணையைத் தொடர்ந்த கர்நாடக அரசு, ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 11 பேர் உயிரிழப்புக்கு ஆர்.சி.பி. நிர்வாகமே நேரடி காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசிடம் அனுமதி பெறாமலே வெற்றி விழா நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டது. விழாவிற்கான திட்டங்களை சரியான முறையில் தகவல் கூறாமல், சமூக ஊடகங்களில் மட்டுமே அழைப்புகள் வைக்கப்பட்டதாகவும், கூட்டத்தை சமாளிக்க எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் சரிவர செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இலவச அனுமதி சீட்டுகள் குறித்து மட்டும் விழாவுக்கு முன் விளக்கமின்றி, விழா நடந்து கொண்டிருந்தபோது அறிவிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆர்.சி.பி. நிர்வாகம் அளவுக்கு மீறிய திரளான மக்களை வரவழைத்து பாதுகாப்பை புறக்கணித்தது என்பதே மையமான குற்றச்சாட்டாகும். இது விளக்கமாக அரசின் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.