உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள மற்றொரு கோவிலான பத்ரிநாத் கோயிலும் நவம்பர் 17-ம் தேதி மூடப்பட உள்ளது. கேதார்நாத் கோயில் 6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குளிர்காலத்தை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை காலை கேதார்நாத் சிவன் கோயிலும், நண்பகலில் யமுனோத்ரி கோயிலும் மூடப்பட்டதாக கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
6 மாதங்களுக்குப் பிறகே கோவில் நடை திறக்கப்படுவதால், கேதார்நாத் கோவிலில் இருந்து சிவன் சிலை மற்றும் யமுனோத்ரி கோவிலில் இருந்து யமுனா தேவி சிலை பல்லக்குகளில் எடுத்துச் செல்லப்பட்டது. சிவன் சிலை உகிமத் கோயிலுக்கும், யமுனா தேவியின் சிலை கர்சாலி கோயிலுக்கும் கொண்டு செல்லப்பட்டது.
கேதார்நாத் கோயில் கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு நடப்பு ஆண்டு யாத்திரையின் போது 16.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள மற்றொரு கோவிலான கங்கோத்ரி கடந்த சனிக்கிழமை மூடப்பட்டது. பத்ரிநாத் கோவில் நடை நவம்பர் 17-ம் தேதி மூடப்படும்.