பத்தனம்திட்டா: கேரள அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நேற்று காலை பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பாயில் தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், சபரிமலைக்கு ஐயப்பனை வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சபரிமலை மாஸ்டர் பிளான் 2011-12-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சபரிமலை மாஸ்டர் பிளான், சன்னதி, கோயில், பாரம்பரிய பாதைகள் மற்றும் நிலக்கல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.

இந்தத் திட்டங்கள் 2050-ம் ஆண்டுக்குள் நிறைவடையும். இந்தத் திட்டத்திற்காக கேரள அரசு ரூ. 1,033.62 கோடி செலவிட முடிவு செய்துள்ளது. கருவறை மேம்பாட்டிற்காக, முதல் கட்டமாக 2022-27-ம் ஆண்டுக்கு ரூ. 600.47 கோடியும், இரண்டாவது கட்டமாக 2028-33-ம் ஆண்டுக்கு ரூ. 100.02 கோடியும், மூன்றாவது கட்டமாக 2024-39-ம் ஆண்டுக்கு ரூ. 77.68 கோடியும் ஒதுக்கப்படும்.
பம்பையை பொறுத்தவரை, மேம்பாடு ரூ. 207.97 கோடி செலவில் செய்யப்படும். மலைப்பாதை மேம்பாட்டிற்காக ரூ. 47.97 கோடி ஒதுக்கப்படும். சன்னதி, கோயில் மற்றும் மலைப்பாதைகளின் மேம்பாட்டிற்காக மொத்தம் ரூ. 1,033.62 கோடி செலவிடப்படும். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.