திருவனந்தபுரம்: மீட்பு குழுவினருக்கான தற்காலிக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது; சவாலான இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: மீட்பு குழுவினருக்கு தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது; சவாலான பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.
வயநாட்டில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது ஒரு எதிர்பாராத மற்றும் வேதனையான பேரழிவு. 191 பேர் இன்னும் காணவில்லை. பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை விரைவாக மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
பழங்குடியினரை இடமாற்றம் செய்கிறோம். செல்ல விரும்பாதவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதுவரை 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 82 நிவாரண முகாம்களில் 2,017 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேப்பாடியில் 8 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 1,486 பேர் தங்கியுள்ளனர். முண்டக்கல் பகுதியில் மீட்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அட்டமலை மற்றும் சூரமலை பகுதியில் நிலைமை சீரடைந்துள்ளது. இன்று கூடுதலாக 132 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. அவர்களுக்கு உதவ கோழிக்கோடு மற்றும் தலச்சேரி பகுதியில் இருந்து மருத்துவர்கள் விரைந்துள்ளனர்.
மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்து கிடக்கும் சடலங்களை மீட்க, ஓய்வு பெற்ற நிபுணர்களை அழைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.