திருவனந்தபுரம்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, கேரளத்தை சேர்ந்த ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் என்ற இரு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள பா.ஜ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மதமாற்ற தடையை முன்னிறுத்தி, பஜ்ரங் தளத்தினர் அளித்த புகாரின் பேரில், துர்க் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. அந்த மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், இந்த விவகாரம் அரசியல் நோக்கத்தில் பேசப்படும் வகையில் மாற்றப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார். அதேசமயம், பா.ஜ.வின் அனுப் அந்தோணி தலைமையிலான குழுவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இரு கன்னியாஸ்திரிகளின் விடுதலைக்காக அரசிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மாவை சந்தித்த பா.ஜ. குழு, அரசின் நிலைப்பாட்டைப் பற்றி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தது.
பிரதிநிதிகள் குழு தெரிவித்ததாவது, “சட்டத்தின் படி இந்த விவகாரம் நடைபெற வேண்டும். அரசு தலையிட்டு விரைவில் தீர்வு காணும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்தனர். இதேவேளை, ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் எம்.பி. பென்னி, பிரேமசந்திரன் உள்ளிட்டோர் துர்க் மத்திய சிறையில் உள்ள கன்னியாஸ்திரிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் பின்னணியில் காங்கிரசின் பங்கு குறித்து கேள்வி எழுந்துள்ளது. கேரள பா.ஜ. தலைவர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது, “மதமாற்ற தடையை கொண்டு வந்தது காங்கிரசின் ஆட்சி. பஜ்ரங் தளத்தினரின் அநாகரிக செயல் கண்டிக்கத்தக்கது. சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எங்கள் நோக்கம், கன்னியாஸ்திரிகளை பத்திரமாக மீட்டு கேரளாவுக்கு கொண்டு வருவதே,” என தெரிவித்துள்ளார்.