பட்ஜெட் 2025-26 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- நாட்டின் வளர்ச்சியின் முதல் இயந்திரமான விவசாயத் துறையை ஊக்குவிக்க 6 புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். பிரதமரின் தான்ய கிரிஷ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்படி விவசாய உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்கள் கண்டறியப்படும். பின்னர் அங்கு விவசாய உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். கிராமப்புற வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்க, ஒருங்கிணைந்த கிராமப்புற வளமைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி கிராம மக்கள் இடம்பெயர்வதை தடுக்க வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். குறிப்பாக பெண்கள், இளம் விவசாயிகள், இளைஞர்கள், சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற மக்கள் பயனடைவார்கள்.
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய 6 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, 4 ஆண்டுகளுக்கு பதிவு செய்யும் விவசாயிகளிடம் இருந்து NABET, NCCF உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் பருப்பு வகைகளை கொள்முதல் செய்யும். கிசான் கிரெடிட் கார்டு (கிசான்) திட்டத்தின் கீழ், வட்டி மானியத்துடன் கூடிய குறுகிய கால கடன் தொகை ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும்.
விவசாயிகள், மீனவர்கள், பால் பண்ணையாளர்கள் என 7.7 கோடி பேர் பயனடைவார்கள். உலகளவில் மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, இதன் ஏற்றுமதி ரூ. 60 ஆயிரம் கோடி. இதை மேலும் அதிகரிக்க, இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் நிலையான மீன்பிடிக்கான கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும். அசாமின் நம்ரூப்பில் 12.7 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட யூரியா தொழிற்சாலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.