மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘ஸ்டாண்ட்-அப்’ நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் கேலி செய்தது சர்ச்சையாகியுள்ளது. நகைச்சுவை நடிகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சிவசேனா தொண்டர்கள் ஹேபிடேட் கன்ட்ரி கிளப் மற்றும் அவரது நிகழ்ச்சி நடைபெற்ற நட்சத்திர ஹோட்டலை சூறையாடினர். அவரது நிகழ்ச்சி படமாக்கப்பட்ட ஹோட்டலையும் தாக்கினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் உள்ளனர். இந்நிலையில், ‘ஸ்டாண்ட்-அப்’ நகைச்சுவை நடிகரும், அரசியல் நையாண்டிகளுக்கு பெயர் போனவருமான குணால் கம்ரா, ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்துள்ளார். அவர் தனது நிகழ்ச்சியில் ஷிண்டேவை துரோகி என விமர்சித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிவசேனா கட்சியினர் குணால் நிகழ்ச்சி நடந்த நட்சத்திர ஓட்டலை சூறையாடினர்.

அவரைக் கைது செய்யக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். குணால் கம்ரா பற்றி சிவசேனா எம்பி நரேஷ் மாஸ்கே கூறுகையில், “காமெடி நடிகர் குணால் கம்ராவை மற்ற கட்சிகள் இயக்குகின்றன. ஷிண்டேவை பகடி செய்ய பணம் கொடுக்கிறார்கள்” என்றார். மேலும், “அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வரும், அவர் எங்கு சென்றாலும், சிவசேனா தொண்டர்கள் யார் என்பதை காட்டுவார்கள்” என்றும் அவர் கூறினார். நரேஷ் கம்ராவை எச்சரித்துள்ளார்.
சிவசேனா செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், “குனால் கம்ராவின் கருத்துக்கள் மிகவும் மோசமானவை. அவர் விமானம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரை போன்று குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதற்கிடையில், சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்புள்ள குணால் கம்ரா, நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களை விமர்சிப்பார்கள். ஆனால் நீங்கள் மாநில மக்களின் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறீர்கள். நீங்கள் இதயத்தில் இருந்து பேசியுள்ளீர்கள். அது உங்கள் உரிமை. அதைக் காக்க எனது கடைசி மூச்சு வரை உங்களுக்கு ஆதரவளிப்பேன்” என்று கூறியுள்ளார்.