புதுடெல்லி: “பயிற்சியின் போது 5 வீரர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் தேசம் எப்போதும் நினைவில் கொள்ளும்,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ராணுவ பயிற்சியின் போது டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற 5 வீரர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சோகமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவு கூரும்,” என்றார்.
முன்னதாக, லடாக் தலைநகர் லேவிலிருந்து 148 கிமீ தொலைவில் நியோமோ-சுஷுல் பகுதி இருந்தது. இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணியளவில் டேங்கர் மூலம் ஆற்றை கடக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 5 வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.