புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல், நாளை (ஜனவரி 13) முதல் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.
இந்த ஆண்டு மகா கும்பமேளா உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நாளை, ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 (மகாசிவராத்திரி) வரை நடைபெறும். கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார விழாவான இந்த மகா கும்பமேளா தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும்.

இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கும்பமேளாவின் போது திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் புனிதமாகக் கருதுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல், பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் லாரன் பவல் சுவாமி தரிசனம் செய்தார். நிரஞ்சனி அகாரா ஆசிரமத்தைச் சேர்ந்த கைலாஷ் ஆனந்த் ஜி மகாராஜும் அவருடன் இருந்தார்.
நாளை தொடங்கும் கும்பமேளாவில் லாரன் பவல் பங்கேற்பார். அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்; குறிப்பாக, அவர் கல்பவசம் செய்வார். கல்பவசம் என்பது மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விரதம். அதைப் பின்பற்றுபவர்கள் தினமும் புனித கங்கையில் நீராடி, விரதம் கடைப்பிடித்து, வழிபடுவார்கள்.