மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தற்போது வரை அங்கு இயல்பு நிலை திரும்பாமல் உள்ளது.
இந்நிலையில், நாளை மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி, கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி புதிதாக கலவரம் வெடித்த ஜிரிபாம் பகுதிக்கு சென்று பார்வையிடுகிறார். அதன்பின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசுகிறார். அம்மாநில அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசும் ராகுல் காந்தி, மாநில ஆளுநர் அனுஷ்யா உய்கேவை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்லவில்லை என்று கேள்வியெழுப்பியிருந்த நிலையில்
ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்ல உள்ளார். மணிப்பூரில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மூன்றாவது முறையாக அங்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.