இந்திய அரசியலில் பரபரப்பாக உருவாகியுள்ள சூழ்நிலையை மையமாகக் கொண்டு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடரில் மத்திய அரசு மொத்தம் 8 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த கூட்டத் தொடரில் அறிமுகமாகி, குழுவுக்கு அனுப்பப்பட்ட வருமான வரி மசோதாவும் இந்த அமர்வில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், டெல்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரிய விவாதத்துக்கு வழிவகுக்கிறது. அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கும் மத்திய அரசு முயற்சிக்கவுள்ளது. இந்நிலையில், கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதற்காக நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சனைகளை முன்வைக்கும் திட்டத்துடன் உள்ளன.
காங்கிரஸ் கட்சி சார்பில், பெஹல்காம் தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது டிரம்ப்பின் தலையீடு, பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவை குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தையும் விவாதிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில், தொகுதி மறுசீரமைப்பு, கீழடி அகழ்வாராய்ச்சி போன்ற பிரச்சனைகளைத் திமுக மற்றும் அதிமுக எம்.பிக்கள் எழுப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் பல அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை முன்வைத்து மத்திய அரசை சோதிக்கவிருப்பதால், எதிர்வரும் நாட்கள் நாடாளுமன்றத்தில் சுடுசுடு விவாதங்களுக்கு வழிவகுக்கும் எனத் தெரிகிறது.