சென்னை: தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடும் என பேரவைத் தலைவர் மு. அப்பாவு நவம்பர் 25-ம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது. பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அவைத்தலைவர் துரைமுருகன், கொறடா ராமச்சந்திரன், அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கொறடா எஸ்.பி.வேலுமணி, ஜி.கே. மணி (பா.ம.க.) நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சிந்தனைச்செல்வன் (விசிக) பங்கேற்றனர்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டிச., 9, 10-ல், சட்டசபை கூட்டத்தொடரை நடத்த, அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்துள்ளது. முதல் நாளில், கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கையை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். மதுரை மாவட்டத்தில் உள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கு, மாநில அரசின் அனுமதி பெறாமல், மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வர் தனி தீர்மானம் கொண்டு வருகிறார்.
இரண்டாவது நாளில், விவாதம் நடத்தப்பட்டு, கூடுதல் செலவினங்களுக்கான பல மசோதாக்கள் மற்றும் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இரண்டு நாட்களும் கேள்வி நேரம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியதும், முன்னாள் எம்எல்ஏக்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.
ரத்தன் டாடா உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும். “குறைந்தது 10 நாட்கள் கூட்டத்தை நடத்த நினைத்தோம். ஆனால் 2 நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்திருப்பது வருத்தமளிக்கிறது” என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.