புதுடெல்லி: மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி நாக்பூரில் நடந்த பேரணியின் போது வன்முறை வெடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தக் கோரிக்கை வந்துள்ளது. முகலாயப் பேரரசரின் கல்லறை அமைந்துள்ள வக்ஃப் சொத்தின் முத்தவல்லி (பாதுகாவலர்) எனக் கூறும் யாகூப் ஹபிபுதீன் டுசி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், யாகூப், “இந்த கல்லறை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1958-ன் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி, இந்த பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்தின் அருகே அங்கீகரிக்கப்படாத கட்டுமானம், மாற்றம், அழிவு, அகழ்வாராய்ச்சி போன்றவற்றை மேற்கொள்ள முடியாது. ஏதேனும் நடந்தால், அது சட்டப்படி குற்றமாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும்.

தற்போது திரைப்படங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வரலாற்றின் சில பகுதிகள் தவறாக சித்தரிக்கப்பட்டு மக்களின் உணர்வுகளை தூண்டி விடுகின்றனர். இதனால், தேவையற்ற போராட்டங்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள், உருவபொம்மை எரிப்பு போன்ற சின்னத்துக்கு எதிரான செயல்கள் நடந்து வருகின்றன. தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினரின் நலனுக்காக இந்த பாரம்பரிய நினைவுச்சின்னங்களை பாதுகாப்பது அவசியம். அத்தகைய நினைவுச்சின்னங்களை அழிப்பது, சேதப்படுத்துவது மற்றும் சட்டவிரோதமாக மாற்றுவது சர்வதேச கடமைகளை மீறுவதாகும்.
உலக கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான 1972 யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இப்பிரச்னைகளை மனதில் கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, ஔரங்கசீப்பின் கல்லறைக்கு பாதுகாப்பு அளிக்க, மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என, யாகூப் கூறினார்.