புதுடில்லியில் ஏடிஆர் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், நாட்டின் பணக்கார அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 27 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையை சேர்ந்த 643 அமைச்சர்கள் தேர்தலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பட்டியலில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில அமைச்சர்கள் அதிக இடம் பிடித்துள்ளனர்.

பட்டியலில் முதலிடம் பிடித்தவர் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் பெம்மாசானி. இவர் தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறைக்கான மாநில அமைச்சராக பணியாற்றுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.5,705 கோடி. இரண்டாவது இடத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளார்; இவரது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி. மூன்றாவது இடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துகளுடன் உள்ளார்.
பின்பு நாராயண பொங்குரு (ரூ.824 கோடி), பைரதி சுரேஷ் (ரூ.648 கோடி), விவேகானந்த் (ரூ.606 கோடி), நாரா லோகேஷ் (ரூ.542 கோடி), மங்கள் பிரபாத் லோதா (ரூ.447 கோடி), பொங்குலெட்டி சீனிவாச ரெட்டி (ரூ.433 கோடி), ஜோதிராதித்ய சிந்தியா (ரூ.424 கோடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் தெலுங்கு தேசம், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 10 பேரில் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், பாஜகவும் முக்கிய பங்கு பெற்றுள்ளது. அதேசமயம், நாட்டின் ஏழ்மையான அமைச்சராக திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுக்லா சரண் நோட்டியா ரூ.2 லட்சம் சொத்துகளுடன் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பீர்பாஹா ஹன்ஸ்டா ரூ.3 லட்சம் சொத்து வைத்துள்ளார். இந்த புள்ளிவிவரங்கள், இந்திய அரசியலில் உள்ள பொருளாதார வேறுபாட்டை வெளிப்படுத்துகின்றன.