வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், காஷ்மீரில் உள்ள லடாக்கிற்குச் சென்ற நடிகர் மாதவன், அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீடு திரும்ப முடியாமல் தவிப்பதாகக் கூறியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட வீடியோவில், “ஆகஸ்ட் மாத இறுதிக்குள், லடாக்கில் உள்ள மலைச்சிகரங்கள் ஏற்கனவே பனியால் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களாக இடைவிடாத மழை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டதால் நான் லேவில் சிக்கிக்கொண்டேன். எப்படியோ, நான் லடாக்கில் படப்பிடிப்புக்கு வரும் ஒவ்வொரு முறையும் இதுதான் நடக்கும். கடைசியாக நான் 2008-ம் ஆண்டு ‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்பிற்காக இங்கு வந்தேன்.

ஆகஸ்ட் மாதத்தில் திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டதால் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது இப்படித்தான். ஆனால் அந்த இடம் இன்னும் மூச்சடைக்கக்கூடிய அளவுக்கு அழகாக இருக்கிறது. இன்று வானம் தெளிவாகும், விமானங்கள் தரையிறங்க முடியும், நான் வீடு திரும்ப முடியும் என்று நம்புகிறேன்,” என்று மாதவன் கூறினார். கனமழை காரணமாக ஜம்மு மற்றும் கத்ரா நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் வரும் 58 ரயில்களை ரத்து செய்ய வடக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் 64 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் முழுவதும் நிரம்பி வழியும் நீர்நிலைகள் மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக பல முக்கியமான பாலங்கள், வீடுகள் மற்றும் வணிகங்கள் சேதமடைந்துள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.