மஹிந்திரா நிறுவனத்தின் பிரபல எஸ்யூவி மாடலான ஸ்கார்பியோ என் இந்தியாவில் தொடர்ந்து அதிக விற்பனை சாதனைகளை பதிவு செய்து வருகிறது. இதன் விற்பனை தற்போது 2 லட்சம் யூனிட்டுகளை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், ஸ்கார்பியோ எனும் கார் மாடலுக்கு இந்தியாவில் எவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதையும் இது நிரூபிக்கிறது.
இந்திய சந்தையில் ஸ்கார்பியோ இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. ஒன்றாக ஸ்கார்பியோ கிளாசிக், மற்றொன்றாக புதிய தலைமுறைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஸ்கார்பியோ என் மாடல். இந்த இரண்டு மாடல்களும் பெரிய அளவிலான விற்பனையை பெற்றுள்ளன. குறிப்பாக, ஸ்கார்பியோ என் மாடல் தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த சாதனையை முன்னிட்டு, மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்கார்பியோ என் கார்பன் எடிஷன் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்த பதிப்பு வழக்கமான ஸ்கார்பியோ என் மாடலை விட மேலும் கவர்ச்சியான தோற்றத்துடன் வெளிவந்துள்ளது. முழுவதும் மெட்டாலிக் கருப்பு நிறத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த மாடல், கருப்பு நிறத்தினை விரும்பும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் ஸ்மோக்கட் குரோம் அக்சென்டுகள், கருப்பு நிற அலாய் வீல்கள், சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்கார்பியோ என் கார்பன் எடிஷன் மாடல் இரண்டு விதமான வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கும். இசட் 8 மற்றும் இசட் 8எல் 7 சீட்டர் மாடல்களாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வகை எஞ்சின் ஆப்ஷன்களுடன் இது வழங்கப்படுகிறது.
இந்த மாடலின் விலை ரூ. 19.19 லட்சம் முதல் ரூ. 24.89 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. வழக்கமான ஸ்கார்பியோ என் மாடலுக்குக் கிடைத்த வரவேற்பு போலவே, இந்த கார்பன் எடிஷனும் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சிறப்பு பதிப்பில் எஞ்சின் தொடர்பான எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான ஸ்கார்பியோ என் மாடலில் கிடைக்கும் 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியன் பெட்ரோல் என இரண்டு எஞ்சின் தேர்வுகளும் இதில் கிடைக்கின்றன.
இந்திய சந்தையில் எஸ்யூவி பிரிவில் நீண்ட காலமாக தனது முக்கிய இடத்தை நிலைநிறுத்தி வரும் ஸ்கார்பியோ மாடல், 2 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்திருப்பது அதன் மகத்துவத்தைக் காட்டுகிறது. மஹிந்திரா நிறுவனம், எஸ்.யு.வி பிரிவில் தனது தலைசிறந்த நிலையை நிலைநிறுத்தும் வகையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் இந்த புதிய அறிமுகம் உறுதிப்படுத்துகிறது.