திருவனந்தபுரம்: மண்டல, மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று காலை மூடப்பட்டது. மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 15-ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (16-ம் தேதி) துவங்கிய மண்டல பூஜைகள், டிசம்பர் 26-ம் தேதி நடந்த பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. 3 நாட்களுக்கு பிறகு மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
மறுநாள் (31-ம் தேதி) முதல் மகரவிளக்கு கால பூஜைகள் துவங்கியது. கடந்த 14-ம் தேதி மகரவிளக்கு கால பூஜைகள் மற்றும் மகரஜோதி தரிசனம் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்தனர். மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சபரிமலையில் நேற்று இரவு பக்தர்கள் யாரும் தங்க அனுமதிக்கப்படவில்லை.
இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஐயப்பன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி, ஐயப்பனை தவமிருந்து தரிசனம் செய்து, கோவில் நடையை அடைத்தார். அப்போது, பந்தளம் மன்னரின் பிரதிநிதி மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார். பாதயாத்திரை நிறைவடைந்த பின்னர், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, பந்தளம் மன்னரின் பிரதிநிதியிடம் கோயில் சாவியை ஒப்படைத்தார்.