கொல்கத்தா: வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள துலியான் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து, போராட்டம் இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது. மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாங்கரில் நேற்றுபோலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்துள்ளதுடன் பல பொலிஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்த மம்தா பானர்ஜி, மாநிலத்தில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நேற்று நடந்த வன்முறையை தொடர்ந்து அனைவரும் அமைதி காக்குமாறு மம்தா பானர்ஜி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி, “மதத்தின் பெயரால் மதம் சம்பந்தமில்லாத விளையாட்டை யாரும் விளையாட வேண்டாம்.தர்மம் என்றால் பக்தி, பாசம், மனிதாபிமானம், அமைதி, நட்பு, கலாச்சாரம், நல்லிணக்கம், ஒருமைப்பாடு, மனிதனை நேசிப்பதே அனைத்து மதங்களிலும் உயர்ந்த இலட்சியம். தனியாக பிறந்து தனித்து இறப்போம், பிறகு எதற்கு சண்டை?
அனுமதி பெற்று அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் நீங்கள் யாராக இருந்தாலும், சட்டத்தை உங்கள் கைகளில் எடுக்க உங்களுக்கு அனுமதி இல்லை. நாங்கள் சட்டத்தின் காவலர்கள். சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் எங்களுக்கு தேவையில்லை. அதனால்தான் சொல்கிறேன், யாராவது உங்களைத் தூண்டிவிட முயன்றால், வலையில் விழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியில் மனதை அமைதியாக வைத்திருப்பவர்களே உண்மையான வெற்றியாளர்கள். அதுதான் உண்மையான வெற்றி,” என்றார். இதற்கிடையில், முர்ஷிதாபாத்தில் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் திரும்பத் தொடங்குவதாகவும் மேற்கு வங்க காவல்துறை தெரிவித்துள்ளது.