
மொழியை வைத்து தமிழக அரசு அரசியல் செய்யும் யுக்தியை பல மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெங்காலி மொழி பேசும் சிறுபான்மையினரை பா.ஜ. ஆளும் மாநிலங்கள் வங்கதேசத்தவர் என கைது செய்கின்றன என்று குற்றம்சாட்டுகிறார். இதன் பின்னணியில், மேற்கு வங்க அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநிலத்தின் அனைத்து சினிமா தியேட்டர்களிலும் தினமும் குறைந்தது ஒரு பெங்காலி திரைப்படம் கட்டாயம் திரையிடப்பட வேண்டும். குறிப்பாக மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடும் ஒரு முக்கியமான ஷோவில் பெங்காலி படம் திரையிடப்பட வேண்டும் என்று உத்தரவு கூறுகிறது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “பீக் நேரத்தில் பெங்காலி படத்தை போட்டால் கூட்டம் குறையும், நஷ்டம் அதிகரிக்கும்” என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மம்தா பானர்ஜி தன் முடிவில் உறுதியாக உள்ளார்.
இதனால் ஹிந்தி படங்களுக்கும், பெங்காலி படங்களுக்கும் இடையே போட்டி தீவிரமாகியுள்ளது. சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன், கியாரா அத்வானி நடித்த ஹிந்தி திரைப்படம் வார் 2 வெளியானது. அதே நாளில் பெங்காலி திரைப்படமான தூம்கேதுவும் வெளியானது. ஹிருத்திக் படத்திற்காக அதிக தியேட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், மம்தாவின் உத்தரவு வார் 2 வசூலை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்காலி திரையுலகத்தினர் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர். ஆனால் ஹிந்தி படத்துறையினர் அதனால் பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டுகின்றனர். அரசியல், மொழி, சினிமா என மூன்றிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது இந்த முடிவு.
மம்தா பானர்ஜியின் இந்த உத்தரவு மொழி அரசியலின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது. மொழியை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வது பிரிவினை உணர்வுகளை தூண்டும் அபாயம் இருப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் நலனை விட அரசியல் முன்னுரிமை பெற்றுவிடக்கூடாது என்பதே பலரின் கருத்து.