ஜம்முவில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். அப்போது, எல்லையில் சமீபகாலமாக அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மனோஜ் சின்ஹா, “எல்லையில் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது. எதிரிக்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. இதில், பாகிஸ்தான் தரப்பில் ஏராளமான உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
போலிஸாரும் ஏனைய பாதுகாப்புப் படையினரும் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றனர். பயங்கரவாதத்தை ஒழிக்கவும், இந்நிலையை முடிவுக்கு கொண்டு வரவும் அவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் எந்த ஒரு குறையும் இருக்காது. ஏனெனில் ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்றார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், “சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக ஜம்மு-காஷ்மீர் பாடுபடுகிறது. இந்த முயற்சிகள் சமமான வளர்ச்சி மற்றும் சமூக-பொருளாதார மாற்றத்திற்கு முக்கியமாக இருக்கும்” என்றார்.