ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை லாப நோக்கில் அழைத்துச் செல்லும் மீனவர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பாம்பன் கடலில் 10க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாட்டுப்படகில் ஏற்றிக்கொண்டு பாலத்தை சுற்றிப்பார்த்தனர்.
படகில் இருந்த யாரும் பாதுகாப்பு கவசங்களை அணியவில்லை. படகில் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை. படகில் இருந்தவர்கள் ஆபத்தை மறந்த நிலையில் நின்று செல்ஃபி எடுத்து கொண்டிருந்தனர்.
பாம்பன் கால்வாய் பகுதியில் காற்றின் வேகம் காரணமாக நீரோட்டம் வேகமாக இருந்தது. ரெயில்வே பாலங்களுக்கு அடியில் அபாயகரமாக படகில் கடந்து சென்றனர்.
தடையை மீறி, முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நாட்டுப் படகில் ஆட்களை ஏற்றிச் சென்ற மீனவர்களிடம், மரைன் போலீஸார் விசாரணை நடத்தினர்.