
திருமணம் என்பது நம் சமூகத்தில் பெரும் பரிசீலனைக்கு உட்பட்ட ஒரு நிலையான நடைமுறை. ஆனால் அதனால் பெண்களுக்கு உண்மையில் நன்மையா இல்லை சுமையா என்பது மீண்டும் ஒரு முறை வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. சமீபத்தில் ரெட்டிட் தளத்தில் வந்த ஒரு பெண்ணின் பதிவு, இந்த விவாதத்தை கூர்மையாக ஊக்குவித்திருக்கிறது.

அந்த பெண் கூறுவதாவது, “திருமணம் செய்யாமல், தனியாக வேலை செய்து வாழ்ந்தால், காலையில் என் அம்மா கொடுக்கும் டீயை சும்மா ரசித்து குடிக்க முடியும். நிதானமாக காலை உணவு சாப்பிட்டு ஆபீஸ் போக முடியும். வேலை முடிந்து சில்லாக ரிலாக்ஸ் ஆகலாம். ஆனால் திருமணமாகி விட்டால், அந்த நேரங்களில் சமையல், துணி துவைத்தல் போன்ற பணிகள் கூடிவிடும். என் ஓய்வு நேரமே தொலைந்து போய்விடும்” என்றார்.
அதுமட்டுமல்லாமல், வீட்டு வேலைக்காக வேலைக்கு ஆள் வைத்தாலும் அதற்கும் தான் சம்பளம் தர வேண்டிய நிலை என்றார். “நான் சம்பாதித்து குடும்பத்துக்காக வேலை செய்யும் பணிப்பெண்ணை பணியமர்த்துகிறேன். எனவே இதில் எனக்கு என்ன நன்மை?” என கேள்வி எழுப்பினார். மேலும், “வீட்டில் என்ன யாரும் தெரியாதவர்களுடன் வாழ வேண்டியது சிரமமாக இருக்கும்” என்றும் அவர் பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவு வெளியானவுடன் ரெட்டிட் தளத்தில் ஒரு பெரிய விவாதமே எழுந்தது. சிலர் அவரது கூற்றை ஆதரித்து, “இந்திய திருமணங்களில் பெண்களுக்கு பெரும்பாலான நேரம் ஏதேனும் பொறுப்பேற்கவேண்டிய நிலை உருவாகிறது. சுதந்திரம் குறைகிறது” என்றனர். மற்றொரு பக்கம், சிலர் திருமணத்தின் நன்மைகளை எடுத்துரைத்தனர்.
ஒருவர் கருத்து தெரிவித்தது: “நீங்கள் தனியாக வாழ விரும்பினாலும் சரி, திருமணமாக வாழ விரும்பினாலும் சரி, ஒத்துழைப்பும் புரிந்துகொள்ளலும் இருந்தால் வாழ்க்கை இனிமையாகும். இருவரும் சம்பாதித்தால் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம். இரட்டை வருமானம் கிடைக்கும் என்பதையும் மறக்க கூடாது.”
மற்றொரு பெண் இதை உறுதிப்படுத்தினார். “எந்த மாதிரியான உறவில் இருக்கிறீர்கள் என்பதே முக்கியம். உங்களுக்கு துணையாக நின்று வீட்டுப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தால், திருமணம் நல்லதே. இல்லையென்றால், அது சுமையாகவே மாறும்.”
இந்த விவாதம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருவதோடு, இது இந்திய குடும்ப அமைப்பில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
அப்படியானால், திருமணம் பெண்களுக்கு நன்மையா அல்லது சுமையா என்பது வாழ்க்கை பாணியும், இணைப்பாளரின் புரிதலும் தான் தீர்மானிக்கும் என்பதே இன்றைய சமூகத்தின் பதிலாகவும் சொல்லலாம்.