சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக மாருதி சுசூகி நிறுவனம் தனது பல்வேறு மாடல்களில் விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பால் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு சமீபத்தில் ஜிஎஸ்டி வரி முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. முன்பு 4 அடுக்குகளாக இருந்த வரி முறையை, 5% மற்றும் 18% என இரு அடுக்குகளாக மாற்றியது. மேலும், 350 சிசிக்கு குறைவான பைக்குகள் மற்றும் 1200 சிசிக்கு குறைவான கார்கள் மீது இருந்த 28% ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, பல முன்னணி கார் நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்து வருகின்றன.
அதன்படி, மாருதி சுசூகி நிறுவனம் தனது மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை மாடலைப் பொறுத்து ரூ.46,000 முதல் ரூ.1,29,000 வரை குறைத்துள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும். ஸ்பிரஸ்ஸோ, ஆல்டோ K10, செலெரியோ, வகன் ஆர், ஸ்விப்ட், பலேனோ, டிசைர், பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, எர்டிகா, ஜிம்னி போன்ற முக்கிய மாடல்களில் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பின் மூலம் பொதுமக்கள் கார் வாங்கும் திறன் அதிகரிக்குமென நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகை விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கார் மற்றும் சிறிய எஸ்யூவி வகைகளில் தேவையை மீண்டும் உயிர்ப்பிக்க இந்த அறிவிப்பு உதவும் எனவும் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.