புதுடில்லி: இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், பெல்ஜியத்தில் கடன் மோசடி வழக்கில் தொடர்புடைய மெஹூல் சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹூல் சோக்சி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் 2018 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பினர். இந்த மோசடிக்கு எதிராக அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மெஹூல் சோக்சி மனைவி பிரீத்தி சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதாலும், அவரை வைத்து சோக்சி தற்காலிக குடியுரிமை பெற்று அந்நாட்டில் தங்கி இருந்தார். இவர் நிரந்தர குடியுரிமை பெற்றால், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் எளிதாக சஞ்சரிக்க வாய்ப்பு உருவாகும் என்பதால், இந்திய அதிகாரிகள் அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்தனர்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய அதிகாரிகள் பெல்ஜிய அரசு மற்றும் அதன் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக, தற்போது மெஹூல் சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை பெல்ஜிய அதிகாரிகளால் ஏற்கப்பட்டுள்ளது. தற்போது சோக்சி அந்நாட்டு சிறையில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.