தடுமாறும் தேசிய அரசியல் சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒரே நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தனித்தனியாக சந்தித்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. இந்த சந்திப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், தேசிய அரசியல் வட்டாரங்களில் இது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சந்திப்புகள் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பின்னணியில் நடைபெறுவதால் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, செப்டம்பர் 9ஆம் தேதி துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
தன்கரின் உடல்நலக் காரணங்களால் அவரது பதவி விலகல், அரசியல் பின்னணியில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் அரசு நடவடிக்கைகளுக்கு எதிராக சில முடிவுகளை எடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, நீதிபதி வர்மா தொடர்பான கண்டன தீர்மானம் அவை நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால் மூத்த அமைச்சர்கள் அவரிடம் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன.
மற்றொரு கோணத்தில், 75 வயது வரம்பு காரணமாக அரசியல் மாற்றத்துக்கான அழுத்தம் உருவாகிறது. இது பிரதமர் மோடியையும் நெருக்கடி நிலைக்கு கொண்டுவந்துள்ளதாக சில வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.
இந்த சந்திப்புகள் அரசியல் மாற்றத்தின் முன்னுரை என்பதை மறுக்க முடியாது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்புகள் ஒரு புதிய தலைமை மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறதா என்பதே தற்போது எழும் பெரிய கேள்வி.