புதுடில்லி: 2026ம் ஆண்டு இந்தியா நடத்தவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு தலைவர்களும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்குவது, நேரடி விமானங்கள், விசா வசதி ஆகியவற்றின் மூலம் மக்களிடையேயான உறவை வலுப்படுத்த வேண்டும் என ஆலோசித்தனர். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் விரிவாக பேசினர்.

மேலும், பயங்கரவாதம், உலகளாவிய சவால்கள் குறித்து கலந்துரையாடினர். சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கான தலைமைத்துவத்திற்கும் தியான்ஜின் உச்சிமாநாட்டிற்கும் பிரதமர் மோடி ஆதரவை தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த சீன அதிபர், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு சீனாவின் முழு ஆதரவு வழங்கப்படும் என்றார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு, வரவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்கான தளத்தை அமைத்திருக்கிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவது, ஆசியா மட்டுமின்றி உலகளாவிய அரசியல், பொருளாதார தளத்திலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.