புதுடில்லி: பீஹார் தேர்தலை மனதில் வைத்து ஜி.எஸ்.டி., வரிகள் குறைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு பிரதமர் மோடி கடுமையாக பதிலடி கொடுத்தார்.
சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், நான்கு அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என்ற இரண்டு மட்டுமே தொடர முடிவு செய்யப்பட்டது. இதனால் உப்பு முதல் கார் வரை பல பொருட்களின் விலை குறையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் காங்கிரஸ், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே தாமதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பீஹார் தேர்தல் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் இறக்குமதி வரிகளை சமாளிக்க வேண்டிய நிலை காரணம் என்றும் விமர்சித்தது.
இதற்கு பிரதமர் மோடி நேற்று டில்லியில் பதிலளித்தார். அவர், காங்கிரஸ் ஆட்சியில் அடிப்படை பொருட்களுக்கும் அதிக வரிகள் விதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். டூத் பேஸ்ட், ஹேர் ஆயில், சோப் ஆகியவற்றுக்கு 27% வரி இருந்தது என்றும், குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டுகளுக்கே 21% வரி விதித்ததாகவும் கூறினார்.
மேலும் சைக்கிளுக்கு 17%, தையல் இயந்திரங்களுக்கு 16%, சிமென்ட்டுக்கு 29% மற்றும் ஹோட்டல் அறைகள், ஏசி, டிவி போன்றவற்றுக்கு 31% வரி விதித்திருந்தது எனவும் மோடி குறிப்பிட்டார். விவசாயிகளும் அப்போது அதிக சுமையை சந்தித்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
அதோடு, பாஜக ஆட்சியில் இவை அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு இந்த தீபாவளியில் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும் என உறுதியளித்தார். நவராத்திரி முதல் நாளிலிருந்தே மக்கள் பலனை அனுபவிப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதே நேரத்தில், இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என்றும் மோடி தெரிவித்தார். இதுகுறித்து அவர் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் ஆகியோருடன் பேசியதாகவும் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியாவின் தொழில், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.